×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் கலந்தாய்வு: ஆர்.டி.சேகர் எம்எல்ஏ பங்கேற்றார்

பெரம்பூர்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன், பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இருந்த போதிலும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் சீர் செய்யப்பட்டது.அந்த வகையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்கேபி நகர், முல்லை நகர், சர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மழையின்போது சில பகுதிகள் பாதிக்கப்பட்டன. மீண்டும் இரண்டு, ஒரு நாளில் கனமழை எச்சரிக்கை உள்ளதால் அந்த கனமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம்  நேற்று காலை எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்தது.இந்த கூட்டத்தில், சென்ற முறை எந்தெந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனவோ, அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்களில் உள்ள மின் மோட்டார்கள் எண்ணிக்கை குறித்தும், அதன் திறனை அதிகப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் தேங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உடனடியாக லாரிகள் மூலம் கழிவுநீரை அகற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முல்லை நகர் கேப்டன் கால்வாய் பகுதியில் 22 எச்பி மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வரும் நிலையில் அதனை 100 எச்பி திறன் கொண்ட மின்மோட்டராக மாற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் அதிகம் தேங்கவில்லை என்றும் அவ்வாறு தேங்கிய இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் உடனடி செயல்பாடுகளால் அடுத்த சில மணி நேரங்களில் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தண்ணீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியோடு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தெரிவித்தார். ஆய்வுக்கூட்டத்தில், தண்டையார்பேட்டை மாநகராட்சி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் பாஸ்கர், ஹரிநாத், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் அன்பழகன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் கலந்தாய்வு: ஆர்.டி.சேகர் எம்எல்ஏ பங்கேற்றார் appeared first on Dinakaran.

Tags : Municipal Corporation ,Drinking Water Board ,North East ,RD Shekhar MLA ,Perambur ,Perambur MLA ,RD Shekhar ,Northeast Monsoon ,Dinakaran ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...